Thursday, August 25, 2011

கிண்ணியா பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக அகற்ற நடவடிக்கை.

கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை கட்டம் கட்டமாக அகற்ற நவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை உறுதியளித்ததாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மர்ம மனிதன் விவகாரம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சுழ்நிலையின் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது எனவும் மர்ம மனிதன் பிரச்சினை நீங்கியவுடன் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வாபஸ் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக தௌபீக் எம்.பி குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கடற்படைத் தளங்கள் அகற்றப்படவிருந்த நிலையிலேயே கிண்ணியா கடற்படை தளம் பொதுமக்களால் தாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக சந்தித்து, கிண்ணியா பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் கடந்த திங்கட்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது இராணுவத்தின் கிழக்கு மாகாணத்திற்கான முன்னாள் கட்டளை தளபதி பொனிபெஸ் பெரேரா உள்ளிட்ட பலர் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டனர்.

இதனையடுத்தே, கிண்ணியா பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து கிண்ணியா பிரதேசத்திற்காக இராணுவத்தின் 224ஆவது படையணியும் புதிதிதாக உருவாக்கப்பட்டது.

இதேவேளை, "கிண்ணியா பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டமைக்கு அங்குள்ள மக்களே பிரதான காரணமெனவும் அவர்களின் செயற்பாடுகளினாலேயே அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது" எனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: Tamilmirrior.lk

Saturday, August 20, 2011

கிண்ணியா பிரதேசத்தை பாதுகாக்குமாறு ஐவேளை தொழுகைகளில் துஆ பிராத்தனை

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் பொதுமக்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு பிரதேச பள்ளிவாசல்களில் துஆ பிராத்தனைகள் இடம்பெற்று வருகின்றன.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் கிண்ணியா கிளையின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியா பிரதேசத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இந்த துஆ பிரார்தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கினங்க ஐவேளை தொழுகைகளில் குனூத் ஓதப்பட்டு துஆ பிராத்தனைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி சோதனைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் இராணுவம்


கிண்ணியாவில் நடைபெற்ற அசம்பாவிதங்களை அடுத்து, இன்று காலை கிண்ணியாவின் சகல வீதிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர். கிண்ணியாவின் ஒவ்வொரு சந்திகளிலும், குறுக்கு வீதிகளிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் வீதியால் பயனிப்பவர்களின் அடையாள அட்டையை பரீட்சிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, April 20, 2011

சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்

பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டி குறித்த சர்ச்சைகள் அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டன.

பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன.

அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையில் 105 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 95 நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிகள் 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டியாக தற்போது இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் இந்த முடிவானது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

உதாரணமாக ஐ சி சி யின் ஒரு நாள் போட்டிகள் தரப்பட்டியலில், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடாத அயர்லாந்து நாட்டு அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஜிம்பாப்வே நாட்டை விட மேலிடத்தில் இருந்தாலும், அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணி பங்கு பெற முடியாமல் போகும் நிலை உருவாகும். ஆகவே இது தொடர்பாக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாடு கூறியுள்ளது.

"முடிவு முறைகேடானது"

ஐ சி சி யின் இந்த நடவடிக்கையை முறைகேடான ஒன்று என கென்ய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டாம் சியர்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"2019 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதிச் சுற்றுகள் இருக்கும் என்று அறிவித்துள்ள ஐ சி சி அதை ஏன் அடுத்து நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் நடைமுறைபடுத்தவில்லை" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடைபெற்று முடிந்த 10 ஆவது உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற்ற கனடா நாட்டு அணி அடுத்த உலகக் கோப்பையில் பங்கு பெற முடியாத நிலை தோன்றியுள்ளது. இது தமக்கு பெரியதோர் அடி என கனடா நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான புபுது தஸ்நாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இத்தாலி கிரிக்கெட் அணியின் மேலாளரும், அந்நாட்டின் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியுமான லூக் புர்னோவும் ஐ சி சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

-BBC-



இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டில்ஷான்!


இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக திலகரட்ண டில்ஷான் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழுவின் தலைவர் துலிப் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தெரிவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

இதன்படி இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்போட்டிக்கு டில்ஷான் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உபதலைவர் பதவிக்கான பெயர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எஞ்சலோ மத்தியூஸ் உப தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, April 19, 2011

ஹம்பாந்தோட்டை, கிரிந்தயில் நில அதிர்வு: நிலத்தில் பிளவு, வீடுகளில் வெடிப்புகள்

ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறினார்.

இதன் விளைவாக இப்பிரதேசத்திலுள்ள 8 வீடுகளில் வெடிப்புக்களும் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒரு வீட்டின் கொங்கிaட்டும் உடைந்து விழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் சுரங்க பணியகம் சுரங்க பொறியியலாளர் அசேல பெர்னாண்டோவை சம்பவம் இடம்பெற்றுள்ள பிரதேசத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்தது. அதேநேரம் இது குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவென பூகற்பவியலாளர் மஹிந்த சென விரட்னவையையும் பணியகம் கொழும் பிலிருந்து நேற்று அனுப்பியது.

இச்சம்பவ பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து அவதானிப்புக்களை மேற்கொண்ட பணியகத்தின் சுரங்க பொறியியலாளர் அசேல பெர்னாண்டோவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த சம்பவம் கடற்கரையிலிருந்து சுமார் இரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. இப்பகுதி ஒரு சமதரையே. இப்பிரதேசத்திற்கு அருகில் மலைப் பாங்கான பகுதி கிடையாது.

இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன.

ன்றாலும் ஒரு வீட்டின் கொங்கிaட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. இச்சமயம் வீடுகளில் சில பொருட்கள் உருண்டு விழுந்ததையும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதையும் பிரதேச வாசிகள் உணர்ந்துள்ளனர் என்றார்.

இது விடயமாக வானிலை அவதான நிலையத்துடன், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் எமது இயந்திரங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் எதுவுமே பதிவாகவில்லை என்றனர். ஆன போதிலும் இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவென கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர் அனுப்பப்பட்டிருப்பதாக பணியகத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

குவைத்துக்குச் சென்று பிரபல திருடியாக மாறிய இலங்கைப் பெண்: பொலிஸாரால் கைது

தங்க ஆபரணங்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குவைத்திலுள்ள ஹவாலி அபிவிருத்தி சந்தையில் வைத்து குறித்தப் பெண் தங்க ஆபரணத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கைப் பெண் திருட்டில் ஈடுபட்டதை சந்தைத் தொகுதியில் பொறிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்கள் பதிவு செய்ததை அடுத்து சந்தைத் தொகுதி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சந்தை உரிமையாளரிடம் தங்க ஆபரணங்களைக் காட்டுமாறு கூறிவிட்டு அதில் ஒரு ஆபரணத்தை எடுத்து குறித்த இலங்கைப் பெண் தனது உடலுக்குள் மறைத்துள்ள காட்சியை பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளது.

இதனை அடுத்து குறித்த இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டதுடன், பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் 12 திருட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதென குவைத் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Followers