Tuesday, November 30, 2010

கிண்ணியாவில் அடைமழை


திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கிண்ணியா,திருகோணமலை,தம்பலகாமம்,மூதூர் மற்றும் கந்தளாய் பகுதிகளிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.கடும் மழை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நுளம்புப் பெருக்கமும் காணப்படுகிறது.மேலும் இம்மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவில் திணைக்களம் கூறுகின்றது.

-Kinniya Express News Team-

Monday, November 29, 2010

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை.



கிண்ணியா நகரசபைக்குட்பட்ட தெருக்களில் கட்டாக்காலி ஆடு,மாடுகளைக் கட்டுப்படுத்த கிண்ணியா நகரசபை நடவடிக்ககை எடுத்துள்ளது.இதற்காக கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிவித்தலின் பின் வீதிகளில் மேற்படி கால்நடைகள் காணப்படின் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

-Kinniya Express Team-

Sunday, November 7, 2010

வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு:

ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண் டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்தார்.

வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Wednesday, November 3, 2010

சவுதியில் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கை பெண்ணை விடுவிக்க இளவரசர் சார்ள்ஸ் உதவி?

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானa நபீக்கை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் சவுதி அரபியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.

Monday, November 1, 2010

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர்.

இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.

“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோ ரையும் மனம் உருகச் செய்தது.

இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நட வடிக்கை இடம்பெற்றன.

றிசானா நபீக்கின் விடுதலைக்காக எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் விடுதலைக்காக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

றிசானா நபீக் விடுதலை செய்யப்பட வேண்டுமென தந்தை நபீக் சவூதி நாட்டு மன்னர், தனது பிள்ளை பணிபுரிந்த குடும்பத்தார்களிடமும் விடுவிப்புக்கான வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்கப்பட வேண்டியுள்ளது

1990 ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி இலங்கைத் தாய் நாட்டிற்கும் கறை படிந்த வரலாற்றைத் தோற்றுவித்த ஆண்டாகும். சுமார் 75000 முஸ்லிம்கள் ஆயுதமுனையில் குறிப்பிட்ட சில மணித்தியாலங் களுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இக்கோர நிகழ்வுக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்றாலும், அம்மக்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு தாரிகள், குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த அரசாங்கம் அதை வழங்கத் தவறிவிட்டது என்ற ஒரு கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டிலே பல நூறு வருடங்கள் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை உலக வரலாற்றில் எங்கும் இடம்பெற்றிருக்காத ஒரு பெரும் அநியாயமாகும்.

இது பலஸ்தீன பிரச்சினைக்கு சமனான அல்லது அதை விடவும் பாரதூரமான நிகழ்வாகும். இதனால் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட உரிமைகள் மீறப்பட்டது மாத்திரமன்றி அவர்களின் வாழ்க்கைத்தரமும் இதனால் படுமோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையிலும், அவர்களது மீள்குடியேற்றக்கனவு இன்னும் நனவாகாமல் இருந்து வருவது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும்.

1990 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை முஸ்லிம்கள் வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுதிலும், பல்வேறுபட்ட காரணங்களால் அது முற்றாக கைகூடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றிய பயமே முஸ்லிம்கள் முழுமையாகக் குடியேறாமைக்கான பிரதான காரணமாகும்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் பூரணமாக ஆயுதமுனையில் தோற்கடிக்கப்பட்டதன் பின் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை சுமார் 10000 குடும்பங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் குடும்பங்கள் சகிதம் அங்கு வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

வட பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக் குறிக்குள்ளாக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமையும் மீள்குடியேற்ற நகர்வுகள் மிகவும் பின் தங்கியுள்ளதற்கான காரணம் எனலாம்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக மீள்குடியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற பொழுதிலும், பெரும்பாலான குடும்பங்களின் வதிவிட, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி வசதிகள் உள்ளிட்ட எத்தனையோ விடயங்கள் இன்னும் பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் அவர்களைக் குடியேற்றுவதோ அல்லது குடும்பங்களுடன் அங்கு தொடர்ந்து வசித்து வருவதற்கு விடுவதோ அறவே முடியாத காரியமாகும்.

கடந்த 20 வருட காலப்பகுதிகளில் இவர்களின் குடியேற்றப் பகுதிகளிலிருந்து சகல வளங்களும் பல்வேறுபட்ட தரப்பினரால் அகற்றப்பட்டு, அப்பிரதேசங்கள் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகின்றமை மற்றுமொரு காரணமாகும்.

சர்வதேச சமூகமும், நிதி வழங்குனர்களும் புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், 1990களில் இடம்பெயர்ந்தவர்களின் விடயத்தில் அக்கறையின்றி, நிதியுவதி வழங்க முன் வராதிருக்கின்றமை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பாதிப்படையச் செய்துள்ளது. இதனைப்பற்றிய எதுவித விழிப்புணர்வையும் பெறாமல் இருப்பதும் கவலை தரும் விடயமாகவே காணப்படுகின்றது.

அண்மையில் இந்திய அரசு 50,000 வீடுகளை அமைத்துத் தருவதற்கு நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றமை, ஏன் இஸ்லாமிய நாடுகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு நிதியுதவி வழங்க முன்வரக்கூடாது என்ற ஆதங்கத்தை சகல தரப்பினரிடத்திலும் ஏற்படுத்துகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமயக்கடமையாக நோக்கப்பட வேண்டும். சகல தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டவேண்டும். முஸ்லிம் சமூகத்திலுள்ள செல்வந்தர்கள், இஸ்லாமிய நிறுவனங்கள், இஸ்லாமிய நாடுகள், நலன் விரும்பிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரேயணியில் நின்று செயற்படும் போதுதான் ஒரு அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கலாம்.

இல்லாவிட்டால் இந்த நாட்டின் பல பிரதேசங்களில் சிதறி வாழ்ந்து வரும் சுமார் 30,000 அகதிக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவே தொடர்ந்தும் காணப்படும்.
ஹுனைஸ் பாரூக் பா.உ.
நன்றி: தினகரன்


சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் றிஸானா நபீக்கை மன்னித்து விடுதலை செய்யக்கோரி மூதூர் மக்கள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபடுவதையும் விடுவிக்கக் கோரிய மகஜரில் மதப்பெரியார்கள் கையொப்பம் இடுவதையும் படங்களில் காணலாம். (படம்:- மூதூர் தினகரன் நிருபர் எஸ். கஸ்ஸாலி)

Followers