Wednesday, February 16, 2011

சகலருக்கும் சொந்த வீட்டைப்பெற்றுக்கொடுப்பதே இலக்கு

மக்களுக்கான சேவையை அரசியல்
அவதூறுகளுக்காக நிறுத்தப் போவதில்லை -
ஜனாதிபதி

நாட்டில் சகலருக்கும் சொந்த வீட்டைப் பெற்றுக்கொடுப்பதே மஹிந்த சிந்தனை எதிர் காலத்திட்டத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவி த்தார்.

மக்களுக்கான சேவைகளை எத்தகைய அரசியல் அவதூறு களுக்காகவும் நிறுத்தப் போவதில்லையென தெரிந்த ஜனாதிபதி, சகலருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

பத்து இலட்சம் வீடுகளை இலக்காகக் கொண்ட ‘ஜனசெவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிருலப்பனை மிஹிந்துபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து நிர்மாணப்பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன, பிரதியமைச்சர் அப்துல் காதர், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரை நிகழ்த்துகையில்:-

தனி மனித வாழ்வை உயர்த்தி அதன் மூலம் குடும்பத்தை உயர்த்தி அதனூடாக கிராமத்தைக் கட்டியெழுப்பி அதிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும். மூன்று தசாப்த கால கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப எம்மால் முடிந்துள்ளது.

போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனி நபர் வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாட்டிலும் நாம் வெற்றிகண்டுள்ளோம். நாடு சுதந்திரமடைந்த கால கட்டத்தில் 1030 டொலராகவிருந்த தனிநபர் வருமானத்தை 2400 டொலராக தற்போது அதிகரிக்க முடிந்துள்ளது. இதனை இரண்டு மடங்காக அதிகரிப்பபதே எமது இலக்கு.

பயங்கரவாதத்திற்கு எதி ரான யுத்தத்தின் போதும் நாட்டின் ஏனைய துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இலவச பாடநூல் விநியோகத்திலிருந்து கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குப் பொதிவரை அரசாங்கம் வழங்குகிறது.

‘நெனசல’ அறிவகத்தை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று உலகை கிராமங்களோடு இணைக்க முடிந்துள்ளது. அதே போன்று வீடமைப்புத் திட்டங்களும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய தரத்தினருக்கான வீடுகளைப் போன்றே வறுமை நிலை மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தவுள்ளோம்.

குடிசைகளில் குடியிருப்போர் புதிய வசதியான வீட்டுற்குச் செல்லும் போது வரும் மகிழ்ச்சி அளப்பரியது. சேரிகளிலும் முடுக்குகளிலும் வாழ்கின்ற மக்கள் எந்நாளும் அதில் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சூழலில் இருந்து ஒரு மாற்றுச் சூழலுக்கு வரும்போது அவர்களின் மனநிலையும் வாழ்க்கையும் மாற்றமடையும்.

ஜனசெவன வீட்டுத் திட்டம் சகல மக்களுக்குமான வீட்டினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இன்று 560 வீடுகள் கொண்ட வீட்டுத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. எந்த வெளிநாட்டு நிதியும் இன்றி அரசாங்கமே முழுமையான நிதியை வழங்குகிறது. வீடமைப்பு வங்கி, வீடமை ப்பு அமைச்சு, மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தினகரன்.lk

Monday, February 7, 2011

கிண்ணியாவில் மீண்டும் தொடர்ச்சியாக பாரிய வெள்ளம்...






நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கிண்ணியாப் பிரதேசமும் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியாவில் குறைந்தபட்சம் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் வடியும் முன்னர் மீண்டும் தொடர் மழை காரணமாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.அத்தோடு பல கிராமங்களில் உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கிண்ணியாவில் பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்களும் முற்றாக தடைப்பட்டுள்ளன.இயந்திரப்படகு மற்றும் தோணிகளைப் பயன்படுத்தியே மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.கிண்ணியாவில் ”பூவரசன் தீவு,சம்மவாச்ச தீவு,ஆலங்கேணி,புதுக்குடியிருப்பு,குறிஞ்சாக்கேணி,சூரங்கல்,காக்காமுனை,அரஏக்கர்,பைஸல் நகர்,நடுஊற்று,முனைச்சேனை,நடுத்தீவு,மாஞ்சோலை,ரகுமானியா,பெரிய கிண்ணியா” போன்ற இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிஞ்சாக்கேணி பகுதியில் கடும் மழையால் சில வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளன.

கந்தளாய்க்குளம்,வான்எல மற்றும் திருகொணமலை மாவட்டத்திலுள்ள அனைத்துக்குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.அத்துடன் கந்தளாய்க் குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதனால் கந்தளாய் மறறும் தம்பலகாமம் பகுதிகளும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்கள் உடினடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.சில நாட்களாக திருகோணமலையிலிருந்து ஏனைய இடங்களுக்கான பஸ் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை இ.போ.ச குறிப்பிடுகின்றது.அத்துடன் திருகோணமலை-கொழும்பு ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Followers