பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன.
அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையில் 105 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 95 நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர்.
உலகக் கோப்பை போட்டிகள் 50 ஓவர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டியாக தற்போது இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் இந்த முடிவானது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
உதாரணமாக ஐ சி சி யின் ஒரு நாள் போட்டிகள் தரப்பட்டியலில், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடாத அயர்லாந்து நாட்டு அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஜிம்பாப்வே நாட்டை விட மேலிடத்தில் இருந்தாலும், அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணி பங்கு பெற முடியாமல் போகும் நிலை உருவாகும். ஆகவே இது தொடர்பாக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அந்நாடு கூறியுள்ளது.
"முடிவு முறைகேடானது"
ஐ சி சி யின் இந்த நடவடிக்கையை முறைகேடான ஒன்று என கென்ய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டாம் சியர்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"2019 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதிச் சுற்றுகள் இருக்கும் என்று அறிவித்துள்ள ஐ சி சி அதை ஏன் அடுத்து நடைபெறவுள்ள 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் நடைமுறைபடுத்தவில்லை" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடைபெற்று முடிந்த 10 ஆவது உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற்ற கனடா நாட்டு அணி அடுத்த உலகக் கோப்பையில் பங்கு பெற முடியாத நிலை தோன்றியுள்ளது. இது தமக்கு பெரியதோர் அடி என கனடா நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான புபுது தஸ்நாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இத்தாலி கிரிக்கெட் அணியின் மேலாளரும், அந்நாட்டின் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியுமான லூக் புர்னோவும் ஐ சி சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-BBC-