Monday, February 7, 2011

கிண்ணியாவில் மீண்டும் தொடர்ச்சியாக பாரிய வெள்ளம்...






நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கிண்ணியாப் பிரதேசமும் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியாவில் குறைந்தபட்சம் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் வடியும் முன்னர் மீண்டும் தொடர் மழை காரணமாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.அத்தோடு பல கிராமங்களில் உணவுத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கிண்ணியாவில் பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்களும் முற்றாக தடைப்பட்டுள்ளன.இயந்திரப்படகு மற்றும் தோணிகளைப் பயன்படுத்தியே மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனர்.கிண்ணியாவில் ”பூவரசன் தீவு,சம்மவாச்ச தீவு,ஆலங்கேணி,புதுக்குடியிருப்பு,குறிஞ்சாக்கேணி,சூரங்கல்,காக்காமுனை,அரஏக்கர்,பைஸல் நகர்,நடுஊற்று,முனைச்சேனை,நடுத்தீவு,மாஞ்சோலை,ரகுமானியா,பெரிய கிண்ணியா” போன்ற இடங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.குறிஞ்சாக்கேணி பகுதியில் கடும் மழையால் சில வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளன.

கந்தளாய்க்குளம்,வான்எல மற்றும் திருகொணமலை மாவட்டத்திலுள்ள அனைத்துக்குளங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.அத்துடன் கந்தளாய்க் குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதனால் கந்தளாய் மறறும் தம்பலகாமம் பகுதிகளும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்கள் உடினடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.சில நாட்களாக திருகோணமலையிலிருந்து ஏனைய இடங்களுக்கான பஸ் சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை இ.போ.ச குறிப்பிடுகின்றது.அத்துடன் திருகோணமலை-கொழும்பு ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Followers