மக்களுக்கான சேவையை அரசியல்
அவதூறுகளுக்காக நிறுத்தப் போவதில்லை - ஜனாதிபதி
நாட்டில் சகலருக்கும் சொந்த வீட்டைப் பெற்றுக்கொடுப்பதே மஹிந்த சிந்தனை எதிர் காலத்திட்டத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவி த்தார்.
மக்களுக்கான சேவைகளை எத்தகைய அரசியல் அவதூறு களுக்காகவும் நிறுத்தப் போவதில்லையென தெரிந்த ஜனாதிபதி, சகலருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.
பத்து இலட்சம் வீடுகளை இலக்காகக் கொண்ட ‘ஜனசெவன’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிருலப்பனை மிஹிந்துபுரவில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்து நிர்மாணப்பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, கீதாஞ்சன குணவர்தன, பிரதியமைச்சர் அப்துல் காதர், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட ராஜதந்திரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரை நிகழ்த்துகையில்:-
தனி மனித வாழ்வை உயர்த்தி அதன் மூலம் குடும்பத்தை உயர்த்தி அதனூடாக கிராமத்தைக் கட்டியெழுப்பி அதிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும். மூன்று தசாப்த கால கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப எம்மால் முடிந்துள்ளது.
போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தனி நபர் வருமானத்தை அதிகரிக்கும் செயற்பாட்டிலும் நாம் வெற்றிகண்டுள்ளோம். நாடு சுதந்திரமடைந்த கால கட்டத்தில் 1030 டொலராகவிருந்த தனிநபர் வருமானத்தை 2400 டொலராக தற்போது அதிகரிக்க முடிந்துள்ளது. இதனை இரண்டு மடங்காக அதிகரிப்பபதே எமது இலக்கு.
பயங்கரவாதத்திற்கு எதி ரான யுத்தத்தின் போதும் நாட்டின் ஏனைய துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. இலவச பாடநூல் விநியோகத்திலிருந்து கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குப் பொதிவரை அரசாங்கம் வழங்குகிறது.
‘நெனசல’ அறிவகத்தை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று உலகை கிராமங்களோடு இணைக்க முடிந்துள்ளது. அதே போன்று வீடமைப்புத் திட்டங்களும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய தரத்தினருக்கான வீடுகளைப் போன்றே வறுமை நிலை மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தவுள்ளோம்.
குடிசைகளில் குடியிருப்போர் புதிய வசதியான வீட்டுற்குச் செல்லும் போது வரும் மகிழ்ச்சி அளப்பரியது. சேரிகளிலும் முடுக்குகளிலும் வாழ்கின்ற மக்கள் எந்நாளும் அதில் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அந்தச் சூழலில் இருந்து ஒரு மாற்றுச் சூழலுக்கு வரும்போது அவர்களின் மனநிலையும் வாழ்க்கையும் மாற்றமடையும்.
தினகரன்.lk
No comments:
Post a Comment