Saturday, October 23, 2010

மூதூரில் படகுப் பாதை விபத்து: கடலில் தத்தளித்த 22 பேர் கடற்படையால் மீட்பு




திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா - மூதூரை இணைக்கும் இறால் குழிப் பாதையின் உப்பாற்றின் மேலான பயணிகளுக்கான படகுப் பாதை பழுதடைந்த காரணத்தால் அதில் பயணித்தவர்கள் கடலில் பாய்ந்து தத்தளித்த சம்பவமொன்று இன்று மூதூரில் இடம் பெற்றுள்ளது.

படகுப் பாதையின் இயந்திரம் பழுதடைந்தபோது அதில் சுமார் 70 பேர்வரை பயணித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இயந்திரம் பழுதடைந்த நிலையில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட படகுப் பாதை கடலின் நடுவே போடப்பட்டிருந்த மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனையடுத்து மின்சாரம் தாக்கலாம் என்ற அச்சத்தில் அதில் பயணித்த 22 பேர் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர்.

அப்பிரதேசத்தில் காவல் ரோந்தில் ஈடுபட்ட கடற்படை அவர்களைக் கண்டு விரைந்து வந்த காப்பாற்றியதில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என்றும் தெரிகின்றது.

தற்போது பழுதடைந்த படகுப் பாதையின் இயந்திரம் பழுது பார்க்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் கிண்ணியா-மூதூர் பாதை இன்னும் சரிவர நிர்மாணிக்கப்படாமை பெரும் அதில் பயணிக்கும் சிரமத்துக்குள்ளாக்கும் விடயமாகும் என்று பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-KE News Team-


No comments:

Post a Comment

Followers