Tuesday, April 5, 2011

அரச முகாமைத்துவ இணைந்த சேவைகள்: 2500 பேருக்கு புதிய நியமனம்; 7ம் திகதி ஜனாதிபதி வழங்குவார்

அரச முகாமைத்துவ இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களாக 2500 பேர் புதிதாக நியமனம் பெறவுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை நாளை மறுதினம் 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழங்கவுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை மறுதினம் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதுடன் நாடளாவிய 25 நிர்வாக மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பேர் ஜனாதிபதியிடமிருந்து தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அரச முகாமைத்துவ சேவைக்கான 2010 திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இப்புதிய நியமனங்களைப் பெறவுள்ளனர்.

3300 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அண்மைக்கால இயற்கை அனர்த்தம் காரணமாக நேர்முகப்பரீட்சைக்குச் சமுகமளிக்க முடியாதவர்களுக்கு பின்னர் நியமனங்கள் வழங்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இவர்கள் பின்னர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்படுவர். அப்பரீட்சையில் தகைமை பெறுவோருக்கு பிறிதொரு தினத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது.

அரச முகாமைத்துவ திறந்த போட்டிப் பரீட்சைக்கு 2010ம் ஆண்டு சுமார் 20 ஆயிரம் பேர் தோற்றினர். அவர்களில் அதிகூடிய புள்ளிகள் பெற்று தகைமைகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டோரில் இருந்தே மேற்படி 2500 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகையில் நாளை மறுதினம் 7ம் திகதி நடைபெறும் நியமனம் வழங்கும் வைபவத்தில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment

Followers