Tuesday, April 19, 2011

ஹம்பாந்தோட்டை, கிரிந்தயில் நில அதிர்வு: நிலத்தில் பிளவு, வீடுகளில் வெடிப்புகள்

ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறினார்.

இதன் விளைவாக இப்பிரதேசத்திலுள்ள 8 வீடுகளில் வெடிப்புக்களும் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒரு வீட்டின் கொங்கிaட்டும் உடைந்து விழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் சுரங்க பணியகம் சுரங்க பொறியியலாளர் அசேல பெர்னாண்டோவை சம்பவம் இடம்பெற்றுள்ள பிரதேசத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்தது. அதேநேரம் இது குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவென பூகற்பவியலாளர் மஹிந்த சென விரட்னவையையும் பணியகம் கொழும் பிலிருந்து நேற்று அனுப்பியது.

இச்சம்பவ பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து அவதானிப்புக்களை மேற்கொண்ட பணியகத்தின் சுரங்க பொறியியலாளர் அசேல பெர்னாண்டோவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த சம்பவம் கடற்கரையிலிருந்து சுமார் இரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. இப்பகுதி ஒரு சமதரையே. இப்பிரதேசத்திற்கு அருகில் மலைப் பாங்கான பகுதி கிடையாது.

இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன.

ன்றாலும் ஒரு வீட்டின் கொங்கிaட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. இச்சமயம் வீடுகளில் சில பொருட்கள் உருண்டு விழுந்ததையும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதையும் பிரதேச வாசிகள் உணர்ந்துள்ளனர் என்றார்.

இது விடயமாக வானிலை அவதான நிலையத்துடன், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் எமது இயந்திரங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் எதுவுமே பதிவாகவில்லை என்றனர். ஆன போதிலும் இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவென கொழும்பிலிருந்து பூகற்பவியலாளர் அனுப்பப்பட்டிருப்பதாக பணியகத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

No comments:

Post a Comment

Followers